டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்; சோதனை ஓட்டம் துவக்கம்
சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் திட்டத்தின், சோதனை ஓட்டம் துவங்கியது. விரைவில் ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 118.9 கி.மீ., சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக, பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான 4வது நடைபாதையில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது. ரயில் வேகம், மணிக்கு 10 கி.மீ., முதல் 40 கி.மீ., வரை இயக்கி சோதனை நடத்தப்படும். அதே நேரத்தில் 40 கி.மீ., முதல் 80 கி.மீ., வரை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான வழித்தடத்திலும் சோதனை மேற்கொள்ளப்படும்.
பிரேக்கிங் சிஸ்டமும் சோதிக்கப்படும். டிசம்பர் 2025க்குள் பூந்தமல்லி-போரூர் இடையே பயணிகள் சேவை துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.