அன்று நாகார்ஜூனா... இன்று அல்லு அர்ஜூன்; தெலுங்கு சினிமாவை குறிவைத்த காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவை குறிவைத்து காங்கிரஸ் அரசு செயல்படுவதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் கைது நடவடிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கை சரியானது தான் என்று சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூன் வீட்டின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கும் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தொடர்ந்து, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், அல்லு அர்ஜூனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் திருமண ஹாலை இடித்து தள்ளினர்.
இந்த நிலையில், அதிகாரத்தைப் பயன்படுத்தி தெலுங்கு சினிமா பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாக பா.ஜ.,வின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. ஆளுங்கட்சி நிர்வாகம் தெலுங்கு திரையுலகை குறிவைத்து செயல்படுகிறது. ஏனெனில், முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சிக்கு தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் இணங்க மறுப்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் நாகார்ஜூனாவின் திருமண மண்டபத்தை இடித்து தள்ளிய போது சர்ச்சை உண்டானது. அவரது முன்னாள் மருமகள் குறித்து பெண் அமைச்சர் ஒருவர் அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, முன்னணி நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகனின் குடும்பப் பிரச்னையில் அரசியல் செய்யப்பட்டது.
அதேபோல, மற்றொரு தெலுங்கு சினிமா ஸ்டார் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் ஆன பிறகும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு திட்டங்களை கொண்டு வரவில்லை. தெலுங்கானா புதிய அத்தியாயத்திற்கு தயாராகி வருகிறது. பா.ஜ., சாத்தியமான மாற்றத்தை உண்டாக்கும், எனக் குறிப்பிட்டுள்ளார்.