திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியில் சுணக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் 'அம்ருத் பார்த்' திட்டத்தில், 28 கோடி ரூபாயில் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆறு நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும், 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, 28.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், ரயில் நிலையம் அருகில் உள்ள, பழைய கட்டடங்கள், இருசக்கர வாகன நிறுத்தம் இடம் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.
ரயில் நிலைய நுழைவாயில் மற்றும் அருகில் உள்ள பழைய கட்டடம் அகற்றப்பட்டு, பயணியர் உள்ளே செல்லவும், வெளியேறவும் இரண்டு நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. மேலும், நான்கு 'லிப்ட்'கள், அமைக்கப்படும் வகையில் பணிகள் துவங்கின.
இந்த நிலையில், பணி துவங்கி பல மாதங்களாகியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. நடைமேடைகளில் கூரை அமைக்கும் பணியும், நுழைவுவாயில் பணியும் நடைபெறாமல் சுணக்கமடைந்து உள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது நடைமேடையில் கூரை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. 'லிப்ட்' அமைக்க பள்ளம் தோண்டியும் பணி நடைபெறவில்லை.
இதனால், ரயில் நிலையத்தில் அரைகுறை பணியால் ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ரயில்நிலை மேம்பாட்டு பணியினை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.