பாகிஸ்தானில் இருந்து ஊர் மண்ணுடன் வந்த பள்ளித்தோழர்; மன்மோகன் மனம் உருகிய தருணம்!

7

இஸ்லாமாபாத்: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சொந்த ஊரான காஹ், தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது. அவர் பிரதமர் பதவியேற்றபோது, அவர் படித்த பள்ளிக்கு, மன்மோகன் பெயரை சூட்டியது பாகிஸ்தான் அரசு.


பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக, ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள சக்வால் மாவட்டம், காஹ் கிராமத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். அங்குள்ள பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். 1947ல் நாட்டுப்பிரிவினைக்கு பிறகு, அந்த கிராமம், பாகிஸ்தான் என்று ஆகி விட்டதால், மன்மோகன் பெற்றோர், இந்தியாவுக்கு வந்து விட்டனர்.

அதன்பிறகு, மன்மோகனுக்கு பாகிஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. அவர் படித்து உயர்ந்து வாழ்க்கையில் வெவ்வேறு பதவிக்கு வந்தபோதெல்லாம் வராத வாய்ப்பு, பிரதமர் பதவியில் இருக்கும்போது வந்தது. அவரை, தங்கள் நாட்டுக்கு வரும்படி பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது. மன்மோகன் சொந்த ஊரான காஹ் கிராமத்தில் கல்லுாரி, மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. ஆனாலும், மன்மோகன் செல்லவில்லை.



அவர் 2004ல் பிரதமர் ஆனதும், அவரது மூதாதையர்கள் பிறந்த காஹ் கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்கள் கிராமத்தை சேர்ந்தவர், தங்கள் ஊர் பள்ளியில் படித்தவர் மன்மோகன் என்று பெருமிதம் அடைந்தனர். பாகிஸ்தான் அரசும், அவர் படித்த பள்ளிக்கு மன்மோகன் அரசு ஆண்கள் பள்ளி என்று பெயர் சூட்டியது. அந்த கிராமமே, மாதிரி கிராமமாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


மன்மோகன் சிங்கும், இந்திய அரசு சார்பில் அந்த கிராத்தில் சோலார் எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த உதவினார். இந்திய பொறியாளர்கள் அங்கு சென்று, சோலார் மின் விளக்குகளையும், சோலார் எரிசக்தி கருவிகளையும் நிறுவிக் கொடுத்தனர்.
மன்மோகன் பிரதமர் ஆனபோது, அவருடன் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலர் அந்த கிராமத்தில் வசித்தனர். அவர்களில் மன்மோகனுக்கு நெருக்கமான ராஜா முகமது அலி என்பவர், மன்மோகனை காண இந்தியாவுக்கே வந்து விட்டார்.



2008ம் ஆண்டு மே மாதம் இந்தியா வந்த அவர், மன்மோகன் சிங்கை சந்தித்து நலம் விசாரித்தார். தன் சிறு வயது நண்பருக்காக, காஹ் கிராமத்து மண்ணையும், அங்கிருந்து தண்ணீரை பாட்டிலிலும் பிடித்துக் கொண்டு வந்தார் ராஜா முகமது அலி. 61 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை காண வந்த நண்பரை, கண்களில் நீர் வழிய எதிர்கொண்டு வரவேற்றார் மன்மோகன். சிறு வயது நண்பர்கள் இருவரும், தங்கள் இளமைக்கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

'தங்கள் கிராமத்துக்கு நல்ல சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவமனை மற்றும் பிற நவீன வசதி கிடைத்ததற்கு காரணம் மன்மோகன் சிங் தான். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் ராஜா முகமது அலி. ஒரு சில நாட்கள் மன்மோகனுடன் கழித்து விட்டு நெஞ்சம் நிறைந்த நினைவுகளுடன் ஊர் திரும்பினார் அவர்.




இந்தியாவில் உயர் பதவி வகித்த மன்மோகன், என்றாவது ஒரு நாள் தன் சொந்த ஊருக்கு வருவார் என்று காஹ் கிராம மக்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவரால் கடைசி வரை அந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. அவரது மறைவுச் செய்தி அறிந்து, பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்கள் பலரும், அவரது சொந்த ஊர் தொடர்பான படங்கள், அவரது பள்ளிச்சான்றுகளை பதிவிட்டு, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement