மாதா, பிதா, குரு, தெய்வம்... ஏன்?
கேள்வி: சத்குரு, நம் கலாச்சாரத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் தான் எப்போதுமே வணங்கி வந்திருக்கிறோம். எதற்காக இப்படி வரிசைப்படுத்தியுள்ளோம்?
சத்குரு:
மனிதன் தன்னுடைய வாழ்க்கையை படிப்படியாக புரிந்துக் கொள்வதற்காக இப்படி வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வரிசை என்ன சொல்கிறதென்றால், நமக்கு முதலில் உயர்ந்தது மாதா, அதற்கடுத்து பிதா, அவர் பின் குரு, கடைசியாக தெய்வம் என்கிறது. ஆனால் இது சரியான வரிசைமுறை கிடையாது. இந்த வரிசையை நிர்ணயித்தது அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று கணக்கு போடுவதற்காக அல்ல. மாறாக நாம் இந்த உலகை உணர்வது இந்த வரிசையில்தான் நிகழ்கிறது என்பதை சொல்வதற்காக.
நாம் பிறந்தவுடன் அன்னையைப் பார்ப்போம், பின்னர் தந்தை யாரென்று தெரிந்து கொள்வோம். ஒருவேளை நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குருவை உணர்வோம். இதற்கு மேலும் நமக்கு அதிர்ஷ்டம் அடித்தால் தெய்வீகத்தை உணர முடியும். மாதா பிதா என்ற இரண்டையும் தாண்டி வளர்ந்தால்தான் குரு என்பவரை உணர்ந்து கொள்ள முடியும். அவரையும் தாண்டும்போது தெய்வீகம் மலரும். அதனால்தான் குறிப்பால் இந்த முறையை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாதா எல்லாவற்றுக்கும் அடிப்படையானவள். அவள் இல்லையென்றால் நாம் இந்த மண்ணிற்கு வந்திருக்க முடியாது. எது நம் பிறப்பிற்கு அடிப்படையானதோ அது மிகுந்த மரியாதைக்குரிய விஷயம் தான், அதில் சந்தேகமில்லை. அதற்கு தேவையான மரியாதையை நாம் செலுத்தித்தான் ஆக வேண்டும். ஆனால் அவளே உச்சபட்ச சாத்தியம் என்று நினைப்பது தவறு.
அடுத்தது பிதா. அவர் இல்லாமலும் இந்த உலகத்திற்கு நாம் வந்திருக்க முடியாது. எனவே மாதா, பிதா இருவரும் நாம் இந்த மண்ணில் உயிர் வாழ்ந்திருப்பதற்கு மூல காரணமாய் இருப்பவர்கள். ஆனால் நாம் இருக்கும் நிலை தாண்டி, இன்னொரு பரிமாணத்திற்கு போக வேண்டும் என்றால், நமக்கு குரு மற்றும் தெய்வீகத்தின் துணை வேண்டியிருக்கிறது.
ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையை தாண்டி வளரவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுள் இருப்பதுதான் இயல்பு. தான் இருக்கும் நிலையை தாண்டி ஒரு படியேனும் எடுத்து வைக்காவிட்டால், 'நான் ஏன்தான் பிறந்தேனோ?' என்ற கேள்வி அவனை அரித்துவிடும். அவன் படிப்படியாக தன் நிலை தாண்டி வளர்ந்தான் என்றால், தன் மாதாவிற்கும் பிதாவிற்கும் என்றென்றும் நன்றியுடன் திகழ்வான்.
நம் வாழ்க்கைக்கு மாதாவும் பிதாவும் அடிப்படையாக இருந்தாலும் குருவும், தெய்வீகமுமே நம் வாழ்வின் நோக்கம். அப்படியென்றால், எந்த மாதிரி குரு எனக்குத் தேவை? இந்தக் கேள்வி உங்களுள் எழலாம். உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக யார் இருக்கிறாரோ அவர் உங்கள் குரு. ஒவ்வொரு மனிதருக்கும் குரு தேவை.
அவரையும் தாண்டி ஏதோ ஒன்றுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டால் அதனை தெய்வீகம் என்போம். அதுவே வாழ்வின் நோக்கம். எனவே மாதாவும் பிதாவும் நம் பிறப்பின் அடிப்படை. குருவும் தெய்வீகமும் நம் வாழ்வின் அடிப்படை. இவை அனைத்தும் சேர்ந்தால் தான் நம் வாழ்க்கை நலமாக நடைபெற முடியும்.