ரோட்டில் கடைகள், டூவீலர்களால் போக்குவரத்து நெருக்கடி

காரியாபட்டி : காரியாபட்டியில் ரோட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், ரோட்டோரம் நிறுத்தப்படும் டூவீலர்கள் போன்றவற்றால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பஜாரில் இருந்து முக்கு ரோட்டை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் படாத பாடு படுகின்றனர்.

காரியாபட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வருகின்றனர்.

பஜார், பஸ் ஸ்டாண்ட், முக்கு ரோட்டில் எப்போதும் மக்கள் மிகுந்து காணப்படுவர். இந்த வழித்தடத்தில் அதிக வாகன போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் பஜாரில் பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்துகின்றனர்.

அதேபோல் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் காய்கறி வாகனங்கள், சாலையோர கடைகள் வைத்து ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை உள்ள கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்து செட் அமைத்துள்ளதால் ரோடு அகலம் சுருங்கி காணப்படுகிறது.

அத்துடன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் படாத பாடு படுகின்றனர்.

வெளியூர் செல்பவர்கள் பஸ் ஸ்டாண்ட் ஓரத்தில் டூவீலர்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல் ஒன்றிய அலுவலக ரோடு முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆட்கள் கூட சென்று வர முடியாத நிலை இருந்து வருகிறது.

அலுவலகத்திற்குச் செல்லும் அதிகாரிகள் தினமும் இக் கட்டான சூழ்நிலையில் சென்று வருகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்பு



ராமலிங்கம், தனியார் ஊழியர்: ஒன்றிய அலுவலக ரோட்டில் டூவீலர்களை நிறுத்திவிட்டு, வெளியூர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இரவு வீட்டுக்கு செல்லும்போது எடுத்துச் செல்கின்றனர்.

கடைகாரர்கள் ரோடு வரை ஆக்கிரமித்து பொருட்களை வைக்கின்றனர். அதிகாரிகள், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்குச் செல்லும் பயனாளர்கள் என பலரும் பாதிக்கின்றனர்.

நடமாடும் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் சென்று வருவது பெரிதும் சிரமமாக இருந்து வருகிறது. அப்புறப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிக்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படாதபாடு படுகின்றனர்



பழனி, தனியார் ஊழியர்: பஜாரில் இருந்து முக்கு ரோடு வரை ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். கடைக்காரர்கள் ஆக்கிரமித்து ரோடு வரை ஷெட் அமைத்துள்ளனர். பொருட்களை ரோட்டில் வைக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் அப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர்.

பள்ளி அருகே காய்கறி கடைகள், நடமாடும் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் மாணவிகளுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ரோட்டோரத்தில் வைத்துள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement