இது நடந்து இருந்தால்..! தமிழகத்தில் மாற்று அரசியல் இருந்திருக்கும்; சொல்கிறார் சீமான்

27

சென்னை: 'இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நடக்க இருந்த மவுன ஊர்வலத்திற்கு, அனுமதி மறுத்திருப்பது அவசியமற்றது. நினைவை போற்றும் வகையில் நடக்கும் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் தான் நடைபெறும்.



அனுமதி மறுப்பு என்பது அவ்வளவு பெரிய மகத்தான மனிதருக்கு அவமதிப்பாக நான் கருதுகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிந்தே பல இடங்களில் அனுமதி கொடுத்த அரசு, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து. விஜயகாந்த் எல்லோரிடமும் அன்பு செலுத்தக் கூடியவர். கருணாநிதி, ஜெயலலிதா, இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள் தான். மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்.


அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர். இன்னும் 10 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்தில் பெரிய ஆற்றலாகவும், மாற்று அரசியலையும் உருவாக்கியிருப்பார். தமிழக மக்கள் அதை இழந்துவிட்டனர். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement