2,447 சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்; மலேசியாவில் இருந்து கடத்தி வந்தவர் கைது!

2

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு காது ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க, பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.


அந்த வகையில், இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேட்டிக் ஏர் விமானத்தின் மூலம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சாக்லேட் பெட்டிகளைப் போன்ற அட்டைப் பெட்டிகளில் கடத்தி வந்த 2,447 சிவப்பு காது ஆமைக்குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


சிவப்பு காது ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஆமைகளால் ஏற்படக்கூடிய ஆபத்து தெரியாமல் பலரும், செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்பி, அதை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இந்த வகை ஆமைகள் சிறியதாக இருந்தாலும், அதிவேகமாக வளரக் கூடியவை. இது அளவில் பெரிதாகி விட்டால், வீட்டில் வளர்க்க முடியாமல் பெரும்பாலானோர் அக்கம் பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளில் கொண்டு சென்று விட்டு விடுகின்றனர்.
அங்கு சிவப்பு காது ஆமைகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, இந்திய ஆமைகளின் வாழ்விடம், உணவு ஆகியவற்றை அபகரிக்கின்றன. பல வகையான தவளைகள், மீன்களையும் கபளீகரம் செய்கின்றன. அதனால் இந்த வகை ஆமை, இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement