உமர் அப்துல்லா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி: பா.ஜ., குற்றச்சாட்டு
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு, அனைத்து துறையிலும் தோல்வியடைந்துள்ளது என்று பா.ஜ., கூறியுள்ளது.
ஸ்ரீநகரில் காஷ்மீர் பா.ஜ., செய்தி தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் அளித்த பேட்டியில்,
காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, பதவிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது.
ஆனாலும் சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது.
அதாவது, தேசிய மாநாட்டு கட்சி, தேர்தல் வாக்குறுதியாக, 12 எரிவாயு சிலிண்டர்கள், 200 யூனிட் மின்சாரம் இலவசம், 10 கிலோ அரிசி,ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கள் மற்றும் தினக்கூலியை முறைப்படுத்துவது உள்ளிட்டவைகளை ஆட்சிக்கு வந்தும் வழங்காமல் உள்ளது. அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் காகித பேப்பர் அளவிலே இருக்கிறது.
அறிப்புக்கள் அனைத்துமே அறிக்கையாகவே இருக்கிறது. காஷ்மீரில் அதிக பனிப்பொழிவால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சரியாகிவிட்டது என்று கூறுகிறது. ஆனால், சாலைகளில் இருந்து பனியை அகற்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று மக்கள் கூறும் வைரலான வீடியோக்கள் காட்டுகின்றன.
காஷ்மீர் மக்கள், அரசு மீது நம்பிக்கையோடு காத்திருந்தனர். அவர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது.
இவ்வாறு அல்டாப் தாக்கூர் கூறினார்.