யுடியூபர் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யுடியூபர் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து, அந்த வீடியோவை யுடியூப்பில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதே போல, அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் குட்டி மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
அவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவரின் வீடு கோவை, காரமடை வெள்ளியங்காட்டில் இருப்பதால், அவர் வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேற்று சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், “வாசன் வீட்டில் சோதனை செய்தோம்.
அப்போது அவர் வீட்டில், வனத்துறையால் வளர்க்க தடை செய்யப்பட்ட விலங்குள் எதுவும் இல்லை.
இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்,” என்றார்.