கலெக்டர் அலுவலக பாலம் பூமி பூஜை
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக பாலம் பூமி பூஜை நிகழ்வு நடந்தது.
விருதுநகர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான கலெக்டர் அலுவலகபாலம் கட்ட கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. 2021ல் மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் 3 ஆண்டுகளாக வடிவமைப்பு, உயரம் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் பணிகள் துவங்காமலேயே இருந்தது.
நேற்று காலை 10:30 மணிக்கு நான்கு வழிச்சாலையில் மருந்து கோடவுன் எதிரே சென்டர் மீடியனில் புதிய கலெக்டர் அலுவலக பாலத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட தலைவர் ஸ்ரீனிவாஸ் கிரண்குமார், பொறியாளர்கள்விஜய் ஆனந்த், மணிபாரதி, ஒப்பந்ததாரர் அசோக் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பாலம் மருத்து கோடவுனில் துவங்கி ஆயுதப்படை வரை 700 மீட்டர் முதல் 800 மீட்டர் நீளம் வரை அமைகிறது. இதனால் நீண்ட காலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்கள், நான்கு வழிச்சாலை வாகனங்கள் இடையேயான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பிறந்துள்ளது. இந்தாண்டு செப்டம்பருக்குள் பணிகள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.