கூட்டணி கட்சிகளை மிரட்டுவதா? தி.மு.க.,வுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை: ''எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் கருத்து சொல்லக்கூடாது என, தி.மு.க.,வின் நாளிதழ் சொல்கிறது என்றால், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதை அது உறுதி செய்கிறது,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

ஒவ்வொரு ஆண்டும், அரசின் சார்பில், பொங்கல் தொகுப்புடன், செலவிற்கு பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு பணம் கொடுக்கவில்லை.

இப்போது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவராம். தேர்தல் நேரத்தில் கொடுத்தால் தான் ஞாபகம் இருக்குமாம். சூரியன் உதிக்கும் போது பணம் கொடுக்கவில்லை. சூரியனுக்கு ஓட்டு போடும் போது பணம் தருவராம்.

பேருந்தில் இலவச பயணம் கொடுத்தால் போதாது. வாழ்க்கை பயணத்தில் லட்சாதிபதியாகும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற மாநிலங்களை போல, பெண்களை லட்சாதிபதியாக மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் கருத்தே சொல்லக்கூடாது என்றால், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதை அது உறுதி செய்கிறது. தி.மு.க., வெற்றியில், கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.

திருமாவளவன் ஏதாவது கூட்டத்துக்கு போனால், முதல்வர் கூப்பிட்டு பேசி, போக விடமாட்டார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து கூறினால், பின் விளைவுகள் ஏற்படும் என்கின்றனர்.

தி.மு.க., கூட்டணி கட்சிகளே, ஆட்சியின் மீது திருப்தி அற்ற சூழலில் உள்ளன. எனவே, சட்டசபை தேர்தலுக்குள் தி.மு.க., கூட்டணி பிரிந்துபோகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement