வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டம்
மதுரை: மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் நகர் தலைவர் எம்.எல்.ஏ., தளபதி தலைமையில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். அ.தி.மு.க., தி,.மு.க.,வினர் ஒரே நேரத்தில் மரியாதை செய்ய வந்ததால் உற்சாகமடைந்த தொண்டர்கள் மாறி மாறி தங்கள் தலைவர்களை புகழ்ந்து கோஷமிட்டனர். ம.தி.மு.க., சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ., பூமிநாதன் உடனிருந்தார்.
மாலை அணிவித்து மதுரை ஆதினம் பேசுகையில், ''கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை. எல்லாவற்றையும் அரசே செய்ய முடியாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும். தேச பக்தி உணர்வுடன் இளைஞர்கள் இருக்க வேண்டும்'' என்றார்.