பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.750: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு

1

புதுச்சேரி:பொங்கல் தொகுப்புக்கு பதில் இந்தாண்டு ரேஷன்கார்டுக்கு 750 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில், ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காங்., ஆட்சியில் கவர்னர் கிரண்பேடிக்கும், அப்போதைய அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன்கடைகள் மூடப்பட்டது. அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2021ல் என்.ஆர்.காங்.,- பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு 500 ரூபாய் வழங்கியது. அதன்பிறகு கூடுதலாக 250 ரூபாய் என, மொத்தமாக 750 ரூபாய் கடந்த ஆண்டு தரப்பட்டது.

கடந்த தீபாவளிக்கு ரேஷன்கடைகளை புதுச்சேரி அரசு திறந்தது. ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளிக்கு தரப்பட்டது. தொடர்ந்து மாதந்தோறும் இலவச அரிசி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதனால் இந்தாண்டு பணத்திற்கு பதில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்தது.

தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் வரும் 9ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை.

பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ரேஷன் கார்டுக்கு ரூ. 750 பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது' என்றார்.

அதை தொடர்ந்து பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் கவர்னர், நிதி துறையின் ஒப்புதல் பெற்று அனைத்து ரேஷன் கார்டுகளிலும் வரவு வைக்கப்பதற்கான கோப்பு பணிகளில் குடிமை பொருள் வழங்கல் துறை இறங்கியுள்ளது.

Advertisement