புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு; விரைவுப்படுத்த வலியுறுத்துவேன் பா.ஜ., மகளிரணி தலைவி வானாதி சீனிவாசன் பேட்டி
புதுச்சேரி; புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில் கட்சியின் நிர்வாக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மகளிரணி தலைவி வானாதி சீனிவாசன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், மாநில நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து சட்டசபை தேர்தல், உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக கருத்துகளை கேட்டறிந்தார்.
பின் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு மாணவிக்கு கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. அதற்குப் பின், ஒருவர் கைது செய்யப்படுகிறார். அவர் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறார். ஒரு பொறுப்பில் இருக்கும் நபராகவும் உள்ளார். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபராகவும் உள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்னொரு நபரை பற்றி பேசி உள்ளார்.
நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக பா.ஜ., மகளிரணி சார்பில், மதுரையில் குஷ்பு தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்களை கைது செய்ததை கண்டித்து தமிழக கவர்னரை இன்று 4ம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அமைச்சர் ரகுபதி இவ்விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை. எப்.ஐ.ஆர்., வெளியே வந்துள்ளது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கை விரைவுப்படுத்த உள்துறை அமைச்சரிடம் தெரிவிப்பேன். சமூக வலைதளங்களில் பெண்களை யார் விமர்சித்தாலும் தவறுதான். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடவடிக்கை தான். அவர்கள் ஆதாரத்தை வைத்துதான் சோதனையிடுவார்கள்.
புதுச்சேரியில் பா.ஜ., மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பாக நிர்வாகிகள் ஏதும் சொன்னார்களா என்பது பற்றி தற்போது சொல்ல இயலாது என்றார்.