தமிழக சட்டசபையில் எதிர்பாராத பரபரப்பு !

39

சென்னை : மாணவி பாலியல் பலாத்காரம், மதுரை டங்ஸ்டன் சுரங்கம், பொங்கல் பரிசு விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழக சட்டசபையின் புத்தாண்டு முதல் கூட்டம் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவர்னர் அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்து புறப்பட்டு சென்றார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.


முன்னதாக சபைக்கு வந்த கவர்னர், முதல்வருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபைக்குள் கவர்னர் வந்ததும் காங்., அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ.,க்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டதால் கவர்னர் அதிருப்தி அடைந்து சபையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து கவர்னர் படிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.


தேசியகீதம் பாட இடையூறு





இது குறித்து கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில்; சபை நடவடிக்கை துவங்கும் முன்னதாக தேசியகீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக கூறி சபை நடவடிக்கையை புறக்கணித்து கவர்னர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார் அந்த சார் !





சபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் யார் அந்த சார் ! என்ற பதாகை மற்றும் பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேறினர்.


கடந்த முறை வெளியேறிய கவர்னர்





கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார்.

'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார்.

Advertisement