சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!
சென்னை: ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த உரையை சபாநாயகர் வாசித்து வருகிறார்.
கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார். 'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்?' என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். உரையை கவர்னர் புறக்கணித்ததைக் கண்டித்து காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த விவாகரத்தில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், 'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என தெரிவித்தார்.