வீட்டிற்குள் புகுந்து தம்பதியை மிரட்டி 20 சவரன் கொள்ளை: மர்ம கும்பலுக்கு வலை

புதுச்சேரி; புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்து, 5 மணி நேரமாக தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை, ஐபோனை கொள்ளையடித்துச் சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி புதுசாரம், சின்னையன்பேட், அய்யப்பன் நகரைச் சேர்ந்வர் சங்கர் (எ) பரணி, 26; இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 10 வயது மகன், 11 மாத பெண் குழந்தை உள்ளது. பரணி, சித்ரா தம்பதி இ.சி.ஆர்., அமுதசுரபி அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர்.

கடந்த 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு வியாபாரம் முடித்து சித்ரா வீடு திரும்பினார். ஆனால், வீட்டிற்குள் நுழைந்ததும், பின்பக்கமாக வீட்டிற்குள் நுழைந்து காத்திருந்த 3 டிப்டாப் ஆசாமிகள், சித்ராவை கத்தி முனையில் மிரட்டி அமர வைத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்ட மது விருந்து முடித்து விட்டு இரவு 11:30 மணிக்கு கணவர் சங்கர் வீடு திரும்பினார்.

சங்கரையும் கத்தி முனையில் அமர வைத்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு தனக்கு சம்பந்தம் இல்லை என, பதில் அளித்த சங்கருக்கு அடி விழுந்தது. சங்கரை தனி அறையில் அடைத்து விட்டு, சித்ராவிடம் மர்ம கும்பல் 45 நிமிடம் பேசினர்.

சித்ராவை சங்கர் அறைக்கு அழைத்த சென்று ஒரு புகைப்படம் காண்பித்து அதில் உள்ள பெண் யார் என விசாரித்தனர். சங்கர் தெரியாது என கூறியதால் அறை கதவை பூட்டிவிட்டு, சித்ராவை வெளியில் அழைத்து சென்று விசாரித்தனர்.

இப்படி 5:00 மணி நேர விசாரணை, அடி உதைக்கு பிறகு, வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் மனைவி சித்ரா அணிந்திருந்த நகை என, 20 சவரன் நகைகள், சிம் கார்டு இன்றி புகைப்படம் எடுக்க பயன்படுத்தி வந்த ஐபோன் ஒன்றையும் கொள்ளையடித்த கும்பல், தங்களுக்கு மேலும் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும்.

வரும் 25ம் தேதிக்குள் பணத்தை தயார் செய்து வைத்து கொள். வீட்டிற்கு வந்து பெற்று கொள்வதாக கூறிவிட்டு, வீட்டின் சி.சி.டி.வி., கேமரா டி.வி.ஆர்., பாக்சை திருடிக் கொண்டு பொறுமையாக வீட்டை விட்டு வெளியேறினர்.

இது தொடர்பாக 2 நாள் கழித்து சங்கர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெருத்த சந்தேகம்

வீட்டிற்குள் வந்த 3 மர்ம நபர்களும் டிப் டாப்பாக உடை அணிந்திருந்தனர். சித்ராவை அக்கா என அழைத்த மர்ம கும்பல், குழந்தை அழுதபோது அறைக்குள் சென்று பால் கொடுக்கும்படியும், தோசை தயார் செய்து கொடுக்கம்படி கூறியுள்ளனர். சித்ராவும் உணவு தயாரித்து கொடுத்து குழந்தைகளை துாங்க வைத்துள்ளார். கணவர் சங்கரை மட்டும் வெகு நேரம் தனி அறையில் அடைத்து வைத்ததுடன், கத்தியை காட்டி அடித்துள்ளனர். கடைசியாக நகைகளை பறித்து கொண்டு சித்ரா மற்றும் குழந்தைகளையும் கணவர் இருந்த அறையில் அடைத்து விட்டு மர்ம கும்பல் தப்பித்துள்ளது. இரவு 10:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அதிகாலை 3:15 மணி வரை வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர். மர்ம கும்பல் தப்பிச் சென்ற உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடுத்த நாள் மாலை போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, 2 நாள் கழித்து போலீசில் புகார் அளித்துள்ளதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Advertisement