போராட்டத்தை தீவிரப்படுத்த கூட்டணி கட்சிகளிடம் பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்' என, கூட்டணி கட்சிகளிடம், தமிழக பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதில் கைதான நபர், தி.மு.க., நிர்வாகிகளுடன் நெருக்கமாக உள்ள, புகைப்படங்களை வெளியிட்டு, விசாரணையை நேர்மையாக நடத்த கோரியும், குற்றத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யுமாறும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதற்காக தன்னை தானே, அவர் சாட்டையால் அடித்து கொண்ட பிறகுதான், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, போராட்டங்களை தீவிரப்படுத்தியது. இந்த விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்து மவுனம் காத்த, தி.மு.க., கூட்டணி கட்சிகளும், தற்போது உண்மை குற்றவாளிகளை கைது செய்ய, வலியுறுத்தி வருகின்றன.
எனவே, பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. இதேபோல், கூட்டணி கட்சிகளான பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., போன்றவற்றிடமும், போராட்டத்தை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, நியாயமான நடவடிக்கை எடுக்கும் வரை பா.ஜ., தரப்பில் ஓய மாட்டோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.