பெண் குத்தி கொலை; ஆண் நண்பருக்கு வலை

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனுாரைச் சேர்ந்தவர் தீபா, 32. இவருக்கும், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும், 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; இரு குழந்தைகள் உள்ளனர்.

தீபா கணவரிடம் கோபித்துக் கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன் கஞ்சனுாரில் தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். தீபாவின் கணவர் மாதேஷ் உடல்நல குறைவால் கடந்தாண்டு இறந்தார். தீபா, போச்சம்பள்ளியில் இயங்கி வரும் கேன்டீனில் வேலைக்கு சேர்ந்தார்.

வேலை முடிந்து டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது, இரவு 9:50 மணிக்கு கஞ்சனுார் முருகன் கோவில் அருகே சென்ற தீபாவை, மர்ம நபர் கத்தியால் குத்தி தப்பி ஓடிவிட்டார். இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

போலீசார் கூறியதாவது: தீபாவுக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே, கம்பைநல்லுார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மிதுன், 30, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தீபா, அவரது கணவர் மாதேசுடன் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். பின், கவுதம் என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனால், மிதுனுடன் பேசுவதை தீபா தவிர்த்தார். தீபாவை, மிதுன் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.

Advertisement