பெண் குழந்தைகளின் கல்வி விழிப்புணர்வு சித்ரகலா பரிஷத்தில் நாளை 'ஓவிய சந்தை'

பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத் நடத்தும் ஓவிய சந்தை நாளை, 12 மணி நேரம் நடக்கிறது.

கர்நாடக சித்ரகலா பரிஷத்தில் ஆண்டுதோறும் ஓவிய சந்தை ஏற்பாடு செய்வது வழக்கம். 22வது ஆண்டாக நாளை நடக்கிறது. இதற்காக, நாடு முழுதும் இருந்து 20 மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஓவியங்களை பார்ப்பதற்கு மக்கள் திரளாக கூடுவர். இதை முன்னிட்டு ஓவிய சந்தை நடக்கும் குமாரகிருபா சாலையில், நாளை காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை அனைத்து வகையான வாகனங்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஓவிய சந்தை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், சித்ரகலா பரிஷத் வளாகத்தில் மும்முரமாக நடந்து வருகின்றன.

பெண் பொம்மை



ஓவியக்கல்லுாரி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு அலங்கார வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். வளாகமே திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கிறது. பெரிய அளவிலான சிறுமி பொம்மை வைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது.

கூலி வேலைக்குச் செல்லும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம்; பெண்கள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சி, நாளை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும்.

ஓவிய சந்தை குறித்து கர்நாடகா சித்ரகலா பரிஷத் பொதுச்செயலர் சஷிதர் ராவ் அளித்த சிறப்பு பேட்டி:

ஓவிய சந்தையை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் வருவர். ஓவியர்கள், தங்களது ஓவியங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்துவர். ஓவியங்களின் விலை 100 முதல் லட்சம் ரூபாய் வரையில் இருக்கும்.

ஓவியர்கள், தங்களது ஸ்டால்களுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம். இதில் கலந்து கொள்வதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஓவியர்கள், தாங்கள் வரைந்த மூன்று ஓவியங்களை அனுப்பினர்.

இதன் மூலம் தகுதியான ஓவியர்களை தேர்ந்து எடுத்துள்ளோம். அவர்களுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக அளிக்கப்படுகிறது. தேவையான உதவிகளை அரசு செய்துள்ளது.

உரிய அங்கீகாரம்



இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல ஓவியர்கள் ஒரு ஆண்டு காத்திருந்து, தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்த உள்ளனர். ஓவியக் கலைஞருக்கு பாராட்டு என்பது முக்கியமானது. இவ்விழா மூலம் அவர்களுக்கு வருமானம் மற்றும் உரிய அங்கீகாரம் ஏற்படுத்தி கொடுப்பதே முக்கிய நோக்கம்.

தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயின்டிங், வரலாற்றை பறை சாற்றும் ஓவியங்கள் என 50,000க்கும் அதிகமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. வருங்காலத்தில் வெளிநாடுகளில் இருந்தும் ஓவியர்கள் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கிறோம்.

ஓவியக்கல்லுாரி மாணவர்களுக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெறுவதற்கு ஆசிரியர்களின் ஊக்குவிப்பே காரணம். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு ஓவியங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஓவிய சந்தையில் மாற்றுத்திறனாளிகளுக்காக 152 ஸ்டால்கள், முதியோர்களுக்காக 185 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓவியர்களுக்கும், ஓவிய சந்தையில் பங்கேற்க வருவோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்து ஓவியங்களை ரசியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று காலை 11:30 மணி அளவில், மூத்த ஓவியர்களுக்கு 'சித்ர சம்மன்' விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Advertisement