'சக்தி' திட்டம் பற்றி பெங்களூரில் ஆந்திர அமைச்சர்கள் குழு ஆய்வு
பெங்களூரு: 'சக்தி' திட்டத்தை ஆந்திராவில் செயல்படுத்தும் நோக்கில், அம்மாநில அமைச்சர்கள் குழு பெங்களூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, சட்டசபை தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிபடி, ஐந்து திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் 'சக்தி' திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தங்களின் குடும்பத்தினருடன் சுற்றுலா, தீர்த்த யாத்திரைக்கு பெண்களும் செல்ல இத்திட்டம் உதவுகிறது.
அண்டைய மாநிலமான ஆந்திர அரசும், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இது வெற்றி அடைந்ததால், திட்டத்தை பற்றி ஆய்வு செய்ய ஆந்திர குழுவினர், நேற்று பெங்களூரு வந்தனர்.
இக்குழுவில் ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் ரெட்டி, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சந்தியா ராணி உட்பட அதிகாரிகள் இருந்தனர்.
'சக்தி' திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள, சாந்திநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்துக்கு வந்தனர். பயணியரை சந்தித்து கருத்து கேட்டனர்.
'சக்தி' திட்டத்தால் எந்த அளவில் பயனடைகின்றனர் என, கேள்வி கேட்டு பதில் பெற்றனர். அப்போது பெண் பயணி ஒருவர், 'சக்தி திட்டம் எங்களுக்கு மிகவும் உதவுகிறது. இதற்கு முன்பு மாதந்தோறும் பஸ் பயணத்துக்காக 1,200 ரூபாய் செலவானது. இப்போது அந்த பணம் மிச்சமாகிறது' என்றார்.
அதன்பின் ஆந்திர குழுவினரை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் அன்புகுமார், தலைமை அலுவலகம் அருகில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., பணிமனைக்கு அழைத்துச் சென்று, ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தார். 'சக்தி' திட்டத்தை எப்படி செயல்படுத்துகின்றனர்; பஸ்களின் நிர்வகிப்பு பற்றி தகவல் தெரிந்து கொண்டனர்.
பின் ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா கூறியதாவது:
கர்நாடகாவில் செயல்படுத்திய 'சக்தி' திட்டம், சிறப்பான திட்டமாகும். இது பெண் பயணியருக்கு மிகவும் உதவியாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்த, இங்குள்ள அரசு பின்பற்றும் விதிகளை தெரிந்து கொண்டு, ஆந்திராவில் செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.