அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி

5

பல்லாரி : அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பல்லாரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களாக பல்லாரி பி.ஐ.எம்.எஸ்., அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் சர்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், புதிய பிரச்னை, மருத்துவமனையில் எழுந்துள்ளது.

பல்லாரி மாவட்ட பி.ஐ.எம்.எஸ்., அரசு மருத்துவமனையில், சைத்ரா, 25, என்ற பெண், கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பல்லாரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கண்காணிப்பாளர் வி.கே.வெங்கடேசன் ஆசைப்பட்டார்.

கடந்த ஆண்டு நவ., 25ம் தேதி, சைத்ரா தனியாக இருந்தபோது, அவரை வெங்கடேசன் தாக்கி, தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதை தன் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வெங்கடேசன் வைத்திருந்தார்.

நடந்ததை பற்றி வெளியே கூறினால், அந்தரங்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சைத்ராவை அவர் மிரட்டினார்.

பின் அவ்வப்போது, வீடியோவை வெளியிடுவதாக 'பிளாக் மெயில்' செய்து, அவரை பலாத்காரம் செய்தார்.

விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சைத்ரா, வெங்கடேஷ் மீது நேற்று முன்தினம் பல்லாரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் 'உன் கணவரின் நடத்தை சரியில்லை; அவரை ஏன் திருமணம் செய்தாய்? இச்சம்பவம் பற்றி வெளியில் கூறினால், உன் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு, குடும்ப மானத்தை வாங்குவேன். உன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.

'விபசார வழக்கில் உன் சகோதரியையும், அம்மாவையும் சிறைக்கு அனுப்புவேன்' என, வெங்கடேசன் தன்னை மிரட்டியதாக சைத்ரா குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement