2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி; அடித்துச் சொல்கிறார் அண்ணாமலை
மும்பை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்தையும் செய்வோம்; எங்கள் வெற்றி உறுதி என்று ரிபப்ளிக் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ரிபப்ளிக் ஆங்கில செய்தி சேனல் ஆசிரியர் ஆர்னப் கோஸ்வாமிக்கு, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
கேள்வி: நீங்கள் மிகவும் கடினமான தலைவர், நல்ல திறமையான தலைவர் தான் என்றாலும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார், சேர்ந்து பயணிக்க முடியவில்லை என்று உங்களை விரும்பாத சிலர் சொல்கிறார்கள், அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபடும். நான் அரசியலுக்கு இளையவன். நானும் தவறு செய்கிறேன். அதை திருத்திக் கொண்டே இருக்கிறேன். கட்சித் தலைவர்கள் என்னை வழிநடத்தி திருத்துகிறார்கள்; கட்சித் தொண்டர்கள் கூட ஆலோசனை கூறி என்னை திருத்துகின்றனர். பலமுறை தொண்டர்களே என்னை, அண்ணா இப்படி பேசாதீங்க என்று எனக்கு அறிவுரை சொல்கின்றனர். குறைகள் இருக்கும். நான் கற்றுக் கொண்டே இருக்கிறேன். நான் பர்பெக்ட் கிடையாது; என்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறேன்.
கேள்வி: பிரதமர் மோடி உங்களை தோளில் தட்டிக் கொடுத்த அந்தத் தருணத்தை (பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மேடையில்) எப்படி உணர்கிறீர்கள்?
பதில்: பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் அவரை அறிவர். அவர் ஒரு சிறந்த மனிதர். கடவுளைப் போன்றவர். அவர் தனிநபரை பாராட்டியதாக நான் கருதவில்லை. தமிழகத்தில் அனைத்து 234 தொகுதிகளுக்கும் நாங்கள் யாத்திரை சென்று வந்தோம். முதல்முறையாக இப்படி ஒரு யாத்திரை நடந்தது. ஏராளமான பேர் அதற்கான பணியில் ஈடுபட்டனர். அந்தப் பணியை பாராட்டும் வகையில், அவர் கட்சி காரிய கர்த்தாக்கள் அனைவரையும் தட்டிக் கொடுத்ததாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: அநியாயத்தை கண்டு கொந்தளிக்கும் கோபக்கார இளைஞர் என்பது உங்களுக்கு சரியாக பொருந்துகிறது. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
பதில்: பிரதமர் மோடியின் உயர்வுக்கு காரணம் அவர் ஒரிஜினலாக, எளியவராக இருப்பதுதான். பல நேரங்களில் என்னுடைய நியாயமான கோபம் விரக்தியின் வெளிப்பாடு தான் அப்படி இருக்கிறது. அதில் தவறு எதுவும் இல்லை. நான் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த கவனத்துடன் தான் பேசுகிறேன்.
கேள்வி: கார்த்தி சிதம்பரம், உதயநிதி போன்ற பெற்றோர் வழியில் பதவிக்கு வந்தவர்களை பற்றி உங்கள் கோபம், அதிகமாக இருக்கிறதே?
பதில்: தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்கள் வகிக்கும் பதவி தான் பிரச்சனை. அவர்கள் தொகுதிக்கு சென்றால் மட்டும் போதும். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இல்லை. இப்படி பதவிக்கு வருபவர்களால் ஜனநாயகம் தோல்வியடைகிறது.
கேள்வி: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, கோவையில் 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டீர்களே? அந்த உணர்வு எப்படி ஏற்பட்டது?
பதில்: சாட்டையில் அடித்துக் கொள்வது என்பது தமிழக கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியது. என் தாத்தா ஒவ்வொரு வருடமும் செய்து வந்தார். இது மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஆழமான வேரூன்றிய கலாசார நடை முறையாகும்.
அண்ணா பல்கலை விவகாரத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கவே அவ்வாறு செய்தேன்.
கேள்வி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உங்களால் தமிழகத்தை வெல்ல முடியுமா?
பதில்: நிச்சயமாக வெற்றி பெறுவோம். வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவினர், கட்டாயம் வெளியேற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் தமிழகத்தை தாழ்ந்த நிலைக்கு கீழே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ., கட்சியில் ஒரு சிறிய மனிதர் நான். தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் நம்பர் 2 கட்சியாக மாறிய பிறகு தான் முதல் இடத்தை பிடிக்க முடியும்.
தமிழகத்தில் உள்ள geogprahical ஏரியாவில் 20 சதவீதத்துக்கு மேல் நாங்கள் இதுவரை போட்டியிடவில்லை. நாம் கடினமான பாதையில் செல்ல வேண்டும். பா.ஜ., சீரியஸ் கட்சி. சீரியஸ் ஆக அரசியல் செய்ய கூடியது என மக்களுக்கு தெரியும். தொழிலுக்காக அரசியல் செய்யவில்லை. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது.
கேள்வி: அ.தி.மு.க., அல்லது வேறு எந்த கட்சியுடன் பா.ஜ.., கூட்டணி வைக்குமா?
பதில்: கூட்டணி என்றால் அது நேச்சுரல் ஆக இருக்க வேண்டும். வசதிக்காக அல்ல. அரசியலுக்காக தான் நீங்கள் கூட்டணியில் இணைகிறீர்கள் என்று ஒரு வாக்காளர் கூட உணரக் கூடாது.
அ.தி.மு.க.,வுடன் நாங்கள் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு, ஊழல் போன்ற பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம். எனவே தேர்தலுக்காக கூட்டணி வைத்தால் மக்கள் பாராட்ட மாட்டார்கள்.
கேள்வி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., 11 சதவீதம் ஓட்டுகளை வாங்கியுள்ளது. இவை தி.மு.க., ஓட்டுகளா, அ.தி.மு.க., ஓட்டுகளா, யாருடைய ஓட்டுகளை நீங்கள் வாங்கியுள்ளீர்கள்?
பதில்: தி.மு.க., ஓட்டுகள் 6.5 சதவீதம் குறைந்துள்ளது. காங்கிரஸ் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி 20 சதவீதம் பெற்றுள்ளது. நாங்கள் 11.34 சதவீதம் பெற்றுள்ளோம்.
கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய கட்சி எதுவும் தனியாக நின்று 10 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளை பெறவில்லை. இப்போது தான் முதல் முறையாக அந்த ஓட்டுகளை பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் தேசிய கட்சிக்கான அடித்தளம் வளர்ந்து வருகிறது. பா.ஜ., கூட்டணிக்கு 18 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்து நல்ல அடித்தளம் உருவாகியுள்ளது. யாருடைய ஓட்டுகளை நாங்கள் பெற்றோம் என்று கேட்டால், இரு கூட்டணிக்கும் மாறி மாறி ஓட்டு போடுவோர் 35 சதவீதம் பேர் இருக்கின்றனர். அவர்கள் தான், எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர் என்று கூறுவேன். குறிப்பாக லோக்சபா தேர்தலில் அவர்கள் மோடிக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனர். சித்தாந்த ரீதியாக வேறுபாடு இருக்கும் பிற கட்சியினர் கூட எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். தி.மு.க., வை சேர்ந்தவர்கள் கூட பிரதமர் மோடிக்கு ஓட்டளிக்க விரும்புகிறார்கள். பிரதமராக மோடி இருக்கும்போது செய்ய முடியாவிட்டால், நாம் எப்போது செய்யப்போகிறோம்?