அண்ணா பல்கலை., சம்பவம்; தமிழக அரசை குறை சொல்லக் கூடாது: சொல்கிறார் திருமாவளவன்

18

சென்னை: 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, இதில் அரசியல் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அ.தி.மு.க.., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆதாய நோக்கில் கையாளுவது வருத்தமளிக்கிறது', என்று வி.சி.க., எம்.பி., திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது: கவர்னர் உரை புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, அவர் சொல்லி இருக்கும் காரணம் வியப்பாக இருக்கிறது. அவர் கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க., அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். தொடர்ந்து அரசியலில் பரபரப்புக்கான ஆளுமையாக இருக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறார். தமிழக மரபு, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவின் போது தேசிய கீதம் என்பது தான். ஆனால், கவர்னர் இந்த மரபை மாற்றும்படி வற்புறுத்துவது ஏற்புடையதல்ல.


தமிழக சட்டசபை மரபுகளுக்கு ஏற்பட அவர் நடந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை, தேசிய கீதத்தை அவமதித்து விட்டோம் என்று செய்வது அதிர்ச்சியளிக்கிறது. அப்படியொரு உள்நோக்கத்தோடு நடந்து கொள்ள தமிழக அரசுக்குக்கோ, சட்டசபைக்கோ அவசியம் இல்லை. நிகழ்ச்சியின் முடிவில் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பதை கவர்னர் அறிந்திடாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அறிந்தும் வேண்டுமென்றே பிரச்னையாக்குவது கண்டிக்கத்தக்கது. கவர்னரின் இந்தப் போக்கு தமிழக மரபை அவமதிக்கும் செயல்.


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, இதில் அரசியல் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அ.தி.மு.க.., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆதாய நோக்கில் கையாளுவது வருத்தமளிக்கிறது, அதிர்ச்சியளிக்கிறது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உடனடியாக ஒருவர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். புலன் விசாரணை நடத்த ஐகோர்ட்டும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இனிமேல், இந்த கேள்வியை எழுப்புபவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் கேட்க வேண்டும். தமிழக அரசின் மீதோ, தமிழக காவல்துறை மீதோ மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தக் கூடாது.


ஆளும்கட்சி கூட்டணியில் வி.சி.க., இருக்கும் போது, எதிர்க்கட்சி போல செயல்பட முடியாது. தோழமைக் கட்சியாகத் தான் செயல்பட முடியும். அதுதான் அரசியல் நாகரீகம். அந்த வகையில், தோழமைக் கட்சியாக, மக்களின் குரலாக இயங்கி வருகிறோம். சுட்டிக் காட்ட வேண்டி பிரச்னைகளையும் சுட்டிக் காட்டியும், கண்டிக்க வேண்டியவற்றை கண்டித்தும் வருகிறோம். எங்கள் சுதந்திரத்தில் கூட்டணி என்னும் பெயரில் ஆளும்கட்சி ஒருபோதும் தலையிட்டதில்லை.


கவர்னரே தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. ஆனால், இந்த கவர்னரை திரும்பப் பெற வேண்டும். சராசரி அரசியல்வாதி போல கவர்னர் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement