ஜனவரி 11 வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

14


சென்னை: 'ஜனவரி 11ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.



சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: ஜனவரி 11ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 8ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் துவங்கும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு ஜன.,11ல் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளிப்பார். ஜனநாயக கடமையிலிருந்து கவர்னர் ரவி தவறிவிட்டார்.


தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் ரவி செயல்படுவது நியாயமா? கலவர நோக்கத்தோடு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 3வது ஆண்டாக கவர்னர் இது போன்று செய்து கொண்டிருக்கிறார். யார் சொன்னாலும் அவை மரபுகளை மாற்ற முடியாது. 3ஆண்டாக இதே பிரச்னை தொடர்கிறது. அடுத்த ஆண்டும் கவர்னர் உரையின் போது மரபுப்படியே சட்டசபை செயல்படும்.


முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே மரபு. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கவர்னர்களால் பிரச்னை இருக்கிறதா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் இது போன்று பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரிக்கும் உரை தான் கவர்னரிடம் கொடுக்கப்படும். உரையை வாசிக்க விருப்பம் இல்லாமல் கவர்னர் சாக்கு போக்கு சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement