வைப்புநிதி முதலீட்டை சிறப்பாக திட்டமிடுவது எப்படி?

ஒரே வைப்பு நிதியில் பெரிய தொகையை முதலீடு செய்வதைவிட, பல்வேறு வைப்பு நிதி கணக்குகளை பராமரிப்பது ஏற்ற உத்தியாக இருக்குமா?

வைப்பு நிதிகள், இடர் குறைந்த தன்மை கொண்ட முதலீட்டாளர்களாலும், மூத்த குடிமகன்களாலும் பரவலாக நாடப்படுகிறது. பாதுகாப்பான முதலீட்டு வழி என்பதோடு, நிச்சயிக்கப்பட்ட பலனை அளிக்கக்கூடிய முதலீடாகவும் திகழ்கிறது.

எளிமையான முதலீடு வாய்ப்பாக இருந்தாலும், வைப்பு நிதி முதலீட்டிலும் திட்டமிட்ட உத்திகளை மேற்கொள்வது கூடுதல் பலன் பெற வழிவகுக்கும். அந்த வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட வைப்பு நிதி கணக்குகளை துவக்கி பராமரிப்பது ஏற்ற வழிகளில் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சாதகங்கள்



வைப்பு நிதிகளை பொறுத்தவரை, எத்தனை கணக்குகளை துவக்கலாம் என எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஒருவர் எத்தனை வைப்பு நிதி கணக்குகளையும் துவக்கி முதலீடு செய்யலாம். ஒரே வங்கியில் மட்டும் அல்லாது பல்வேறு வங்கிகளிலும் பல்வேறு வைப்பு நிதிகளை துவக்கிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்வதில் பல்வேறு சாதகங்களும் உள்ளன.

வெவ்வேறு முதிர்வு கால அளவு களில் முதலீடு செய்ய முடியும் என்பதால் பணமாக்கல் தன்மை அதிகரிக்கும். இதன் மூலம் பல்வேறு இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். வட்டி விகிதப் போக்கிற்கு ஏற்ப அதிக பலனையும் பெறலாம். வருமான வரி சலுகையையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாகவே, வைப்பு நிதிகள் மூலம் அதிக பலன் பெற, ஒரே முறையில் முதலீடு செய்வதைவிட, வெவ்வேறு கால அளவுகளில் பல்வேறு முதலீடுகளாக ஏணிப்படி முறையில் முதலீடு செய்வது ஏற்றது என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

பராமரிப்பு உத்தி



அந்த வகையிலும் பல்வேறு வைப்பு நிதி முதலீடுகளை மேற்கொள்வது சாதகமானதாகும். வெவ்வேறு முதிர்வு கொண்ட முதலீடு கையில் இருப்பதால், இடையே அவசரம் எனில், வைப்பு நிதியை உடைத்து பாதியில் விலகும் தேவை இருக்காது.

மேலும், ஒரே வட்டி விகிதத்தில் முதலீட்டை முடக்கும் அபாயமும் இல்லை. நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை அமைத்துக்கொள்ளலாம். பல்வேறு வைப்பு நிதி கணக்குகளை மேற்கொள்வது சாதகமானது என்றாலும், இவற்றை பராமரிப்பது சிக்கலானது என்பதால் அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.

முதலில் நிதி இலக்குகளை தீர்மானித்து அவற்றுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். குறுகிய கால இலக்கு எனில் அதற்கேற்ற கால அளவை நாடலாம். முதிர்வுகால அளவும் வெவ்வேறு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருப்பதுபோல அமைத்துக்கொள்ளலாம். தானாக முதிர்வடையும் வசதியை யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக பலன் அளிக்கும் வகையில் மறுமுதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக முதலீடு தொடர்பான விபரங்களை குறித்து வைத்து கவனித்து வர வேண்டும். ஒரே வங்கியில் முதலீடு செய்வதைவிட வெவ்வேறு வங்கிகளில் முதலீடு செய்வது ஏற்றது. இதன் மூலம் வட்டி விகித பலனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலும் வைப்பு நிதிக்கான காப்பீடு பாதுகாப்பையும் பரவலாக்கிக் கொள்ள முடியும்.

வருமான வரிச் சலுகை வேண்டும் என்றால் அதற்கேற்ப வரிச்சலுகை கொண்ட முதலீட்டை திட்டமிட வேண்டும். வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது, அதிக கால அளவை நாடுவது ஏற்றதாக இருக்கும்.

Advertisement