அயர்ன் பாக்சில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம்: டில்லியில் பறிமுதல்
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் இரண்டு பேரிடம் 979 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் அயர்ன் பாக்சில் தங்கம் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டில்லிக்கு நேற்று நள்ளிரவு வந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பிறகு எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடமைகளை பிரித்து சோதனை செய்யப்பட்டது. அதில், எலெக்ட்ரிக் அயர்ன் பாக்சில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் மதிப்பு ரூ.46.80 லட்சம் ஆகும்
அதேபோல், நேற்று (ஜன.,06) சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ஆண் பயணியின் உடமைகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டன. எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் அவர் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் பையில் மறைத்து 379 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கம் கொண்டு வந்தது தெரியவந்தது. ரூ.29 லட்சம் மதிப்புள்ள இது பறிமுதல் செய்யப்பட்டது.