டில்லியில் பிப்ரவரி 5ல் சட்டசபை தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

1

புதுடில்லி: டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது.


டில்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


இந்நிலையில் இன்று(ஜன.,,07) மதியம் 2 மணிக்கு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நிருபர்கள் சந்திப்பில், தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது:


டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் ஜன.,10ல் துவங்கி ஜனவரி 17ம் தேதி நிறைவு பெறுகிறது.


வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஜனவரி 18ம் தேதி.


வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 20ம் தேதி.


ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும்.




டில்லியில் ஆண் வாக்காளர் 83.5 லட்சம், பெண் வாக்காளர் 71.7 லட்சம், மூன்றாம் பாலினத்தனர் 1,261 பேர் உள்ளனர். இளைஞர்கள் பெரும் அளவில் வந்து ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தேவையற்றது.


மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின் போது தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். 2.08 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். டில்லி சட்டசபை தேர்தலுக்காக, 13,033 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.


நாடு 100 கோடி வாக்காளர்கள் என்ற நிலையை எட்டவிருக்கிறது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கண்டது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் முழு உற்சாகத்துடன் ஆர்வத்துடனும் ஓட்டளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement