தேயிலை பூங்காவில் மினி தொழிற்சாலை அமைந்தால் விற்பனை அதிகரிக்கும்

ஊட்டி; 'ஊட்டி தேயிலை பூங்காவில் மினி தேயிலை தொழிற்சாலை அமைய வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு, சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஊட்டி சிறந்த கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் கோடை விழாவில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தேயிலை விவசாயம் மாவட்டத்தில் பிரதானமாக உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி தொட்டபெட்டா அருகே, 10 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பூங்கா உருவாக்கப்பட்டது.

தொட்டபெட்டா சிகர சாலையில், நடந்து செல்லும் துாரத்தில் உள்ள தேயிலை பூங்காவுக்கு பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டம், முழுக்க இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தவிர, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தேயிலை துாள் விற்பனை மையமும் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, இங்கு, தேயிலைத் துாள் உற்பத்தி செய்யும் முறை குறித்து, மாதிரி மினி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். எதிர்வரும் நாட்களில், 'இப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்தில் முழுக்க 'ஆர்கானிக்' தேயிலை துாள் தயாரிக்கும் வகையில், மினி தொழிற்சாலை அமைக்க வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இங்கு தொழிற்சாலை அமையும் பட்சத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், உற்பத்தி செய்யும் தேயிலை துாள் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement