ஆயிரம் சந்தேகங்கள் : ஓய்வு பெற்றவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்குமா?

பங்குச்சந்தையில் எங்கே முதலீடு செய்யணும்? விபரம் தெரிவிக்கவும்.



யோகராணி, பொள்ளாச்சி, கோவை.

உங்கள் கேள்வியில் இருந்தே நீங்கள் பங்குச் சந்தைக்குப் புதியவர் என்று தெரிகிறது. உங்கள் முதலீட்டை நீங்கள் பங்குகளில் ஆரம்பிக்க வேண்டாம். ரிஸ்க் அதிகம். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும், அதன் நுட்பங்கள் புரிவதற்கு கொஞ்ச காலம் ஆகும்.

அதற்குள் கையைச் சுட்டுக்கொண்டு, 'சீ சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்று பங்குச் சந்தை மீதே வெறுப்பை வளர்த்துக்கொண்டு விடுவீர்கள்.

அதனால், மியூச்சுவல் பண்டில் ஆரம்பியுங்கள். இ.டி.எப்., என்றொரு முதலீட்டு வகை இருக்கிறது. இவை இரண்டைப் பற்றியும் புத்தகங்களை வாங்கி, விரிவாக வாசியுங்கள்.

நம் 'தினமலர்' நாளிதழின் தொழில் பகுதியைத் தவறாமல் படிப்பதோடு, ஐந்து ஆங்கில வணிக நாளிதழ்களில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து படித்து வாருங்கள். அடுத்த ஓராண்டில் உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும். உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் துணிச்சலோடு துவங்குவீர்கள்.

வீட்டுக்கடன் வாங்கும்போது, மொத்த கடன் தொகைக்கு இணையான ஒரு காப்பீடு எடுத்துள்ளேன். இதற்கு சில ஆண்டுகள் முன்னதாக ஒரு காப்பீடு எடுத்துள்ளேன். மேலும், இன்னொரு பொதுத்துறை வங்கி கணக்குடன் இணைந்த ஒரு காப்பீடும் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், வீட்டுக்கடன் வழங்கிய வங்கி எந்த காப்பீடில் இழப்பீடு கோரும்?



ஷங்கர், திருவள்ளூர்.

வீட்டுக்கடன் தொகைக்கு இணையாக ஒரு காப்பீடு எடுத்தீர்களே, அதைத்தான் அந்த வங்கி தன் ஆவணங்களில் பதிவு செய்திருக்கும். உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால், அந்த வங்கி, அந்தக் காப்பீட்டில் இருந்துதான், கட்டவேண்டிய மீதத் தொகைக்கான கோரிக்கையை முன்வைக்கும்.

ஓய்வு பெற்ற நபர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்க வாய்ப்பு உண்டா? எந்த வங்கிகள் வழங்குகின்றன?



டி.ரவீந்திரன், சென்னை.

பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், ஒருசில வங்கிகள் 70 வயது வரைகூட கொடுக்கின்றன.

கிரெடிட் கார்டின் அடிப்படை, அதை பெறுபவருக்கு முறையான வருமானம் இருக்கிறதா என்பதைக் கணிப்பது தான்.

ஓய்வூதியமோ, வைப்பு நிதியில் இருந்து வட்டி வருவாயோ, டீமேட் கணக்கோ இருந்து, அதில் சீரான வருவாய் வருமானால், வங்கிகள் அந்த நபருக்கு கிரெடிட் கார்டு கொடுப்பதற்கு தயங்காது.

ஆனால், இது அந்தந்த வங்கி மேலாளரது முடிவு. இன்னும் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, உங்கள் வைப்பு நிதிக்கு நிகராக கிரெடிட் கார்டு பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 'செக்யூர்டு கார்டு' என்று பெயர். இரண்டு, உங்கள் மகனோ, மகளோ வைத்திருக்கும் கிரெடிட் கார்டுடன் 'ஆட் ஆன்' கார்டு வாங்கிக்கொள்வது.

நான் அரசு ஊழியர். அவசரத் தேவைக்காக என் காப்பீடு, பாலிசி ஒன்றை சரண்டர் செய்து, தொகையை பெற்று செலவு செய்தேன். அந்தத் தொகைக்கு நான் வருமான வரி செலுத்த வேண்டுமா?



மணிகண்டன், திருப்பூர்.

பொதுவாக எந்த வரியும் செலுத்த வேண்டாம்.மெச்சூரிட்டி தொகைக்கு வரி இல்லை. ஆனால், ஒருசில விதிவிலக்குகள் உள்ளன.

ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு வாங்கப்பட்டு, அதன் பிரீமியம் தொகை, ஏதேனும் ஓராண்டில், மொத்த 'சம் அஸ்யூர்டை' விட 20 சதவீதம் அதிகமாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்றெல்லாம் துணை விதிகள் சொல்கின்றன.

அருகே இருக்கும் நல்ல ஆடிட்டர் ஒருவரை கலந்தாலோசியுங்கள். உங்கள் பாலிசிக்கு ஏற்ப, அவர் ஆலோசனை சொல்வார்.

நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கன்ஸ்யூமர் லோன் வாங்கி இருந்தேன். முறையாக மாதாந்திர தொகை கட்டாததால், மொத்தத் தொகை அதிகரித்து விட்டது. அவ்வளவு தொகை என்னால் கொடுக்க முடியாது என்று சொன்னதால், குறிப்பிட்ட தொகையைக் கட்டி செட்டில்மென்ட் செய்யச் சொல்கின்றனர். அப்படிச் செய்தால், பிற்காலத்தில் வேறு லோன்கள் வாங்குவதில் சிக்கல் இருக்குமா?



ஏ.தினேஷ், திருப்பூர்.

இருக்கும். இந்த 'ஒன் டைம் செட்டில்மென்ட்' என்பது அப்போதைக்கு கிடைக்கும் தற்காலிகத் தீர்வு. விட்டால் போதும் என்று கடனில் இருந்து வெளியே வருவது. ஆனால், அதன் பாதிப்புகள் தொடரும். நீங்கள் முறையாக மாதாந்திர தொகையைக் கட்டாதவர் என்பது ஏற்கனவே, உங்களுடைய 'கிரெடிட் ஹிஸ்டரி'யில் பதிவாகியிருக்கும்.

அதன் இறுதியில் மொத்த தொகையையும் செலுத்தாமல், 'செட்டில்மென்ட்' செய்துகொண்டீர்கள் என்பதும் பதிவாகும்.

அதாவது நீங்கள் நம்பகமான கடனாளி இல்லை; கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாதவர்; உங்களால் நிதி நிர்வாகம் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதை உங்கள் கிரெடிட் ஸ்கோர் சுட்டிக்காட்டும்.

இதனால், அடுத்த கடன் கோரும்போது, வங்கிகள், தயக்கம் காட்டலாம், மறுக்கலாம். அல்லது கூடுதல் வட்டிவிகிதம் விதிக்கலாம்.

என் மகனுக்கு மூக்கில் ஏற்பட்ட பாதிப்புக்காக தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், செலவுகளைச் சமாளிப்பதற்கு என்ன வகையான மருத்துவ காப்பீடு எடுத்தால் சரியாக இருக்கும்?



நரேன், வாட்ஸாப்.

ஏற்கனவே எடுத்த காப்பீடைத்தான் மருத்துவமனையில் பயன்படுத்த முடியும். அல்லது, மருத்துவச் செலவுகளை 'க்ளெய்ம்' செய்ய முடியும்.

புதிதாக எடுப்பதாக இருந்தால், ஏற்கனவே உள்ள பாதிப்புகளை, நோய்களைக் குறிப்பிட்டுத்தான் எடுக்க முடியும். அந்த காப்பீடையும் உடனடியாகப் பயன்படுத்த முடியாது. அதற்கான 'காத்திருப்புக் காலம்' என்ற ஒன்று உண்டு.


என்னால் எந்த காப்பீட்டுத் திட்டத்தின் பெயரையும் பரிந்துரை செய்ய இயலாது. நல்ல காப்பீட்டு முகவரை அணுகி, முழு விபரங்கள் சொல்லி, காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். உடனடியாக இல்லையெனினும், வருங்காலத்தில் அது பயன்படக் கூடும்.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement