தரமில்லாத சாலை பணி: ஆய்வு அவசியம்
பந்தலுார்; 'பந்தலுார் அருகே மாங்கம்வயல் சாலை பணியை ஆய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொன்னானி முதல் மாங்கம்வயல் வரையிலான இணைப்பு சாலை சீரமைப்பு பணி, பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.44 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொன்னானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த சாலை, தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, பழைய சாலையை முழுமையாக பெயர்த்து எடுத்து, அதன் மீது புதிய தார் சாலை அமைக்க வேண்டும். ஆனால், 'ஒப்பந்ததாரர் சாலையின் பெரும்பாலான இடங்களில், ஜல்லி கற்களை போட்டு உறுதிப்படுத்துவதை தவிர்த்து, வெறும் மண்ணை கொட்டி சமன்படுத்தி வருகிறார்; ஆற்று நீர் கிராமத்திற்குள் வரும் வகையில் புதிய பாலம் அமைத்து உள்ளார்,' என, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து 'வீடியோ' மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனுவும் அனுப்பி உள்ளனர்.
பொது மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் நடக்கும் சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ''பணி தரமான முறையில் மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும் நேரில் ஆய்வு செய்து தரமான முறையில் சாலை பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.