கனடாவின் அடுத்த பிரதமர் ஆவாரா அனிதா ஆனந்த்?
ஒட்டாவா: கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்து யார் அப்பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக தந்தை - பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.
சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சி எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அவர் நேற்று( ஜன.,06) கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை, பதவியில் நீடிப்பேன் எனக்கூறியிருந்தார்.
இந்தாண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்து கனடாவின் புதிய பிரதமர் ஆக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்தது. இதில், அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
யார் இவர்
இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(57). 2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.
படிப்பு
இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி,
ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு
டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு
டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.
யேல் பல்கலையில் சட்டப்படிப்பு பேராசரியராக பணிபுரிந்தார். பிறகு அரசியலுக்குள் நுழைந்தார்.
அரசியல் அனுபவம்
கோவிட் பரவலின் போது, பொது சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக இருந்தபோது தடுப்பூசி கொள்முதல் உள்ளிட்ட அவர் ஆற்றிய பணிகளுக்காக பாராட்டுகளை பெற்றார்.
2021 ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார். அப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டார். கனடா ஆயுதப்படைகளுடன் அவருக்கு சிறிய பிரச்னை ஏற்பட்டது.
இதன் பிறகு அவர் கருவூல வாரியத்துறைக்கு மாற்றப்பட்ட இவர், கடந்த டிச., மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
இவர்களை தவிர்த்து நிதியமைச்சர் கிறிஸ்டினா ப்ரீலாண்ட், கனடா வங்கி முன்னாள் கவர்னர் மார்க் கார்னே, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்கோயில் பிலிப்பே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.