ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர், பந்த்ராதன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் நேற்று வீட்டில் இருந்த போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளனர். இதையறிந்த, அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காஸ் ஹீட்டர்களில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு தான் இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் குளிர்காலங்களில் ஹீட்டர்களை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குளிர் காலங்களில் எல்.பி.ஜி., ஹீட்டர்களை பயன்படுத்தும் போது, அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியேறும். அந்த சமயம் காற்று உட்புகாதபடி, கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருப்பது விபரீதத்தை ஏற்படுத்தும். எனவே, காஸ் ஹீட்டர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.