நியமன தேர்வு எழுதி 6 மாதமாச்சு; இன்னும் வெளியாகல விடைக்குறிப்பு! தவிப்பில் இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்

தமிழகத்தில் 2024 ஜூலையில் எழுதிய நியமன தேர்விற்கு 6 மாதங்கள் கடந்தும் தற்போது வரை விடைக்குறிப்பு கூட வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியம் செய்து வருகிறது. விரைவில் தேர்வு முடிவை அறிவித்து காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தேர்வு எழுதி காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 2012ல் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இத்தேர்வுக்கு 2 ஆண்டுகள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் எழுதலாம்.2013ல் சீனியாரிட்டி முறையை ரத்து செய்து விட்டு வெயிட்டேஜ் முறைப்படி பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்களை வெயிட்டேஜ்ஜில் கருத்தில் கொண்டனர்.


அடுத்தடுத்து 2013, 17, 19, 22 ஆண்டுகளில் தேர்வு நடத்தினாலும் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்ததால் இதில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2024 ஜூலை 21ல் நியமன தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2768 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் இத்தேர்வு முடிந்து 6 மாதங்கள் ஆகியும் தற்போது வரை விடைக்குறிப்பு கூடவெளியாகவில்லை. வழக்கமாக எந்த ஆசிரியர் தேர்வு நடந்தாலும் 5 நாட்களில் விடைக்குறிப்பு வெளியாகிவிடும். நாளுக்கு நாள் இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடம் அதிகரித்து வருகிறது.



தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 688 பணியிடங்கள் உள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பணிநியமனமும் நடக்கவில்லை.


விடைக்குறிப்பு எப்போது வெளியிடுவர் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலுவலக எண்ணிற்கு அலைபேசியில் தேர்வர்கள் பேசினால், முறையாக பதில் அளிப்பதில்லை. உடனடியாக விடைக்குறிப்பு, தேர்வு முடிவு வெளியிட்டு பணிநியமனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.



- நமது நிருபர் -

Advertisement