பொங்கல் பண்டிகைக்கு 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கம்; போக்குவரத்து துறை அறிவிப்பு

1

சென்னை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களுக்கு 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில் பண்டிகை தருணங்களில், விடுமுறை தினங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஜன. 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


4 நாட்களுக்கு மட்டும் மொத்தம் 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ்கள் ஜன.10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. இது குறித்து போக்குவரத்துத்துறை கூறி உள்ளதாவது;


சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


பொங்கல் பண்டிமை தருணத்தில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பஸ்களுடன் கூடுதலாக 5,736 பஸ்கள் இயக்கப்படும்.


கோயம்பேட்டில் இருந்து இ.சி.ஆர்., மார்க்கமாக செல்லும் பஸ்களும், காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.


மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திரா செல்லும் பஸ்களுடன், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.


இவ்வாறு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Advertisement