ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் பகல் நேரங்களில் மாயமாவதால் குழப்பம்: விரைந்து பிடிக்க கோரிக்கை


ஆடுகளை வேட்டையாடும் நாய்கள் பகல் நேரங்களில்
மாயமாவதால் குழப்பம்: விரைந்து பிடிக்க கோரிக்கை


சேந்தமங்கலம்,கொல்லிமலையில் ஆடுகளை ‍வேட்டையாடும் நாய்கள், பகலில் மாயமாகி விடுவதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் நி‍றைந்த மலைப்பகுதியாக கொல்லிமலை உள்ளது. இந்த மலையில் வாழும் விலங்குகள் என எடுத்துக்கொண்டால், கரடி, காட்டுப்பன்றி மட்டுமே உள்ளன. இந்த கரடி இனமும், ஒரு சில பகுதிகளில் இருந்த நிலையில், நாளடைவில் அதுவும் குறைந்தது. இந்நிலையில், கடந்த மாதம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, சிறிய அளவிலான சிறுத்தை புலி சென்றதாகவும், அதை பஸ்சில் இருந்தவர்கள் பார்த்ததாகவும் கூறப்பட்டது. அதன்பின், 20 நாட்களுக்கும் மேலாக இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், கடந்த, 28ல் மர்ம விலங்கு கடித்து, 4 ஆடுகள் உயிரிழந்தன. அதைத்தொடர்ந்து, கடந்த, 7 நாட்களுக்கும் மேலாக, மர்ம விலங்கு தினமும் ஒரு பட்டிக்கு சென்று ஆடுகளை கடித்து வருவது தொடர்ந்து வருகிறது. இதனால், இந்த மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர், 'டிராக் கேமரா'க்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால், அந்த மர்ம விலங்கு, 'டிராக் கேமரா' இல்லாத பகுதிக்கு சென்று ஆடுகளை கடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் குண்டூர் நாடு பஞ்சாயத்து பகுதியில், ஆட்டுப்பட்டியின் முன் பொருத்தியிருந்த, 'டிராக் கேமராவில், 3 நாய்கள் கூட்டாக சேர்ந்து பட்டிக்குள் சென்று ஆடுகளை கடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இதை வைத்து அந்த மர்ம விலங்கு, நாய்கள் தான் என, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நாய்கள் அதிகாலை நேரத்தில் மட்டும் வெளியில் வருவதாகவும், பகல் நேரங்களில் எங்கு உள்ளது என, தெரியாமல் மர்மமாக உள்ளதால் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மேலும், இந்த நாய்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொல்லிமலையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: இந்த நாய்கள் குண்டூர் நாடு, அரியூர் நாடு பகுதிகளில் மட்டும் தான் சுற்றித்திரிகின்றன. நாய்களை யாரும் நேரில் பார்த்ததில்லை. வனத்துறையினர், 'டிராக் கேமரா'வில் தான் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், நேற்றுக்கூட பட்டியில் புகுந்து அதிகாலை நேரத்தில், 4 ஆடுகளை கடித்துள்ளது. இதுவரை, 40க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இந்த நாய்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்பகுதியில் ஆடுகள் வளர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement