சென்னையில் எச்.எம்.பி.வி., தொற்று; 'புதிதாக இல்லை' என்கிறது மருத்துவத்துறை!

5

சென்னை: சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், 'இது புதிய வகை உருமாறிய தொற்று இல்லை. ஏற்ககனவே இருப்பது தான்' என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.


@1brஉலக நாடுகளை உலுக்கிய கொரோனா தொற்றின் தாக்கம் 5 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது ஹெச்,எம்.பி.வி. எனப்படும் ஹியூமன் மெட்டாநியுமோ வைரஸ் (HMPV)என்று வைரஸ் பாதிப்புகள் சீனாவை உலுக்கி எடுத்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் அந்த வைரஸ் பாதிப்புகள் தென்பட ஆரம்பித்துள்ளன.


கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந் நிலையில் தற்போது சென்னையில் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி., பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 2 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மூலம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.


தற்போதுள்ள நிலவரப்படி தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 குழந்தைகள் என 4 பேருக்கும், குஜராத்தில் ஒரு குழந்தை என மொத்தம் 5 ஹெச்.எம்.பி.வி., தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த 5 தொற்றுகள் இன்று ஒரே நாளில் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


சளி,இருமல், புளு காய்ச்சல், தொண்டையில் எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இந்த வைரசின் அறிகுறிகள் ஆகும். இது தவிர, சிலருக்கு மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் கோளாறு போன்ற தொந்தரவுகளும் அறிகுறிகளாக இருக்கும். பாதிப்பு முற்றும் பட்சத்தில் நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிக்கப்படும்.


இந்த வைரஸ் தொற்றானது சிறிய குழந்தைகள், பெரியவர்களை தாக்கும். இருப்பினும், அது பற்றி பதற்றம் அடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இது பற்றி தமிழக சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தில், 'இது புதிய வகை உருமாறிய தொற்று இல்லை. ஏற்கனவே இருக்கும் இன்புளூயன்ஸா பாதிப்பு தான்' என்று தெரிவித்துள்ளது.

Advertisement