ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு; சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை; மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். 33 பேரிடம் ரூ. 3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவிந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந் நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நேரம் இல்லை என்றும் ஐகோர்ட் விமர்சித்துள்ளது.
முன்னதாக, விசாரணையின் போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோர்ட்டில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.