நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்; கேட்கிறார் சீமான்
சேலம்: 'நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன தவறு நடந்து விட்டது' என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
நாங்கள் எங்களின் கட்சி நிகழ்ச்சிகளில் வேறு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து தான் ஒலிபரப்புகிறோம். இது என் நாடு, தமிழ்நாடு. இதில் எங்கே உள்ளது திராவிட நல்திருநாடு. 10க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டீர்கள். ஆனால் நான் பாட்டையே எடுத்து விட்டேன்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் எங்கிருந்து திராவிடம் என்பது வருகிறது. திராவிடம் என்பது என்ன மொழி? உங்க வசதிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிவிட்டீர்கள், நான் என் சவுகரியத்துக்காக தமிழ்த்தாய் வாழ்த்தையே நீக்கிவிட்டேன். அதிகாரத்துக்கு நான் வந்தால் பாவேந்தர் பாரதிதாசன் பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்தாக போடுவேன்.
பபாசி என்பது ஒரு பொது அமைப்பு. அந்த நிகழ்ச்சியில் பாட்டை போட்டுவிட்டேன். உங்களுக்கு அதில் என்ன பிரச்னை? அரசு விழாவில் நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து போடாமல் இருங்க.
தமிழ்த்தாய் வாழ்த்து போட்டதில் என்ன தவறு இருக்கிறது? நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இல்லை என்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிட வேண்டும். நான் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு என்ன தவறு இருக்கிறது?
கவர்னர் முன் வைத்த கோரிக்கை தப்பு. நான் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த குடிமகனும் ஏற்கமாட்டான். இது என் நாடு, என் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு தான் பின்னர் தேசிய கீதம் ஒலிப்பரப்பப்பட வேண்டும். இது எல்லா மாநிலங்களுக்கான தன்னாட்சி, உரிமை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை புத்தகக் காட்சியில் சீமான் பேசியதற்கும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிப்பு செய்ததற்கும் கண்டனம் தெரிவித்த பபாசி அமைப்பினர், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்குத்தான் சீமான் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.