பஸ், மெட்ரோவில் பயணிக்க ஒரே 'ஸ்மார்ட் கார்டு' அறிமுகம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம், எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்து, மாநகர பேருந்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் உருவாக்கிய, 'சிங்கார சென்னை அட்டை' சில நாட்களாக சோதனை செய்யப்பட்டது.


இந்நிலையில், இந்த அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை மத்திய பணிமனையில், நேற்று அறிமுகம் செய்தார்.


இந்த அட்டையை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட, பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.


இதை, அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்தும் வகையில், நவீன டிக்கெட் கருவி உபயோகத்தில் உள்ளது.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக, 50,000 அட்டைகள், எஸ்.பி.ஐ., வாயிலாக கட்டணமின்றி வழங்கப்படும்.


பிரதான பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக டிக்கெட் விற்பனை மையங்களில் பெற்று, 'ரீசார்ஜ்' செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.



மேலும், மாநகர பேருந்து நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்யும் வசதி, விரைவில் கொண்டுவரப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை நிர்வாக இயக்குநர் நடராஜன், எஸ்.பி.ஐ., வங்கி உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement