மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தால் 3 மாதங்களில் தொகை! சட்டசபையில் உதயநிதி பதில்
சென்னை; மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களில் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் 2 நிமிடங்கள் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது;
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த 5.27 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 76 சதவீதம் அதாவது, 4 லட்சத்து 897 மகளிர் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக காந்திராஜன் எம்.எல்.ஏ.,வின் வேடசந்தூர் தொகுதியில் மட்டும் 62,000 பேர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் பயன்பெற்றுள்ளனர், மதிப்பீட்டுக் குழுவில் உள்ள நாங்கள் செல்லும்போது பல பகுதிகளில் கூடுதலாக தரவேண்டும் என்று மனு அளித்தும் கூட இன்னும் அனுமதி அளிக்காமல் இருக்கின்றனர் என்ற விவரத்தை தெரிவித்தார்கள்.
எனவே, ஏற்கனவே மனு அளித்து தகுதியுடைய நிலுவையில் உள்ள அனைவருக்கும் அந்த தொகையானது வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதயநிதி பதிலளித்து பேசியதாவது;
தமிழகத்தில் உள்ள மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார்கள். இதற்கு என்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் 1 கோடியே 63 லட்சத்து 57, 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 70 சதவீதம் விண்ணப்பங்கள், அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52,198 விண்ணப்பங்கள் முதல்கட்டமாக ஏற்கப்பட்டன. 2023ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்கள்.
மேலும் முதன்முறை விண்ணப்பித்த போது நிராகரிக்கப்பட்ட மகளிர் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுதலாக சுமார் 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இப்போது இத்திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கும், யாரும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.