பொங்கல் அங்காடி, கிராம சந்தை திறப்பு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தையை, சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி இயக்ககம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், வீராம்பட்டினம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொங்கல் அங்காடி நேற்று திறக்கப்பட்டது. சபாநாயகர் செல்வம் அங்காடியை திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேசன், முன்னிலை வகித்தார்.
அதில், பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட பொருட்களும், சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயாரித்த, துணிகள், வீட்டிற்கு தேவையான பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12ம் தேதி வரை அங்காடியில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, பொருட்களை பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என, வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.