பெங்களூரு, ஆமதாபாத், சென்னை, சேலத்தில் எச்.எம்.பி.வி., தொற்று பரவியதால் பதற்றம்
புதுடில்லி: தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம், கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களில் ஐந்து குழந்தைகளுக்கு, எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டாநிமோ' தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், எச்.எம்.பி.வி., எனப்படும், ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது. நுரையீரலை தாக்கி சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த வகை தொற்று, குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது.
உறுதியானது
இதனால், சீன மருத்துவமனைகள் வழக்கத்துக்கு மாறாக குழந்தைகளால் நிரம்பி வழியும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகின. இதை தொடர்ந்து, ஆசிய நாடுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கின.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரில் மூன்று மாத பெண் குழந்தை மற்றும் எட்டு மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், மூன்று மாத பெண் குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டது. மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த இரண்டு மாத குழந்தைக்கும் எச்.எம்.பி.வி., தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று குழந்தைகளும் வெளிநாடுகளுக்கு பயணிக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு குழந்தை மட்டும், திருப்பதிக்கு சமீபத்தில் சென்று வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தகவல் பகிர்வு
தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியது.
அதே நேரம், சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி., தொற்றின் அதே வகை திரிபு தான் இங்கு பரவுகிறதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எச்.எம்.பி.வி., தொற்று பரவல் ஏற்கனவே உள்ளதாக ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.
அச்சம் வேண்டாம்!
எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நாட்டின் சுகாதார கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நெறிமுறைகள் விழிப்புடன் உள்ளன. நம் சுகாதாரத்துறை எவ்வித சவால்களையும் சமாளிக்கும் திறனுடன் உள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை.
- ஜே.பி.நட்டா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பா.ஜ.,