40 -49 வயது வாக்காளர் எண்ணிக்கை அதிகம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 5 லட்சத்து 38 ஆயிரத்து 906 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட வாக்காளரே அதிகம் உள்ளனர்.
மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்தை உள்ளடக்கிய சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து, நேற்றுமுன்தினம், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் மொத்தம் 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர் உள்ளனர்.
எட்டு தொகுதிகளை சேர்ந்த மொத்த வாக்காளர்களில், 40 முதல் 49 வயதுள்ள வாக்காளர்களே அதிகம்; 5 லட்சத்து 38 ஆயிரத்து 906 பேர் உள்ளனர். அடுத்ததாக 50 - 59 வயதுக்கு உட்பட்ட வாக்காளர், 4 லட்சத்து 71 ஆயிரத்து 709 பேர்; மூன்றாமிடத்தில், 30 முதல் 39 வயது வரையுள்ள, 4 லட்சத்து 45 ஆயிரத்து 332 வாக்காளர் உள்ளனர்.
இளைஞர்கள் என்கிற பிரிவில், 18 வயது முதல் 39 வயது வரையிலான 8 லட்சத்து 38 ஆயிரத்து 95 வாக்காளர்களும்; 40 முதல் 59 வரையிலான நடுத்தர வயதில், 10 லட்சத்து 10 ஆயிரத்து 615 வாக்காளர்களும்; 60 வயது முதல் 79 வயது வரையிலான மூத்த வாக்காளர் 4 லட்சத்து 84 ஆயிரத்து 103 பேர்; 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த வாக்காளர் 82 ஆயிரத்து 795 பேர் உள்ளனர்.
வயது வாரியாக வாக்காளர் எண்ணிக்கை
18 - 19 வயது: 32,320
20 - 29 வயது: 3,60,443
30 - 39 வயது: 4,45,332
40- 49 வயது: 5,38,906
50- 59 வயது: 4,71,709
60- 69 வயது: 3,07,515
70 - 79 வயது: 1,76,588
80 வயதுக்கு மேல்: 82,795