மக்களுக்கு ஆறுதல் அளிக்காத மணிப்பூர் முதல்வரின் மன்னிப்பு!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதம் முதல் தொடர்ச்சியாக வன்முறைகள், கலவரங்கள் மற்றும் இன மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்காக, அம்மாநில முதல்வர் பைரேன் சிங், பொதுமக்களிடம் சமீபத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், '2024ம் ஆண்டு மிகவும் துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. அத்துடன், 2023 மே முதல் இன்று வரை நடைபெறும் சம்பவங்களுக்காக, மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நடந்த சம்பவங்களில் பலர் தங்களின் அன்பிற்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அதற்காக வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில், மெய்டி இன மக்கள் 53 சதவீதமும், நாகாக்கள், குக்கிகள் உள்ளிட்ட பழங்குடியினர் 40 சதவீதமும் வசிக்கின்றனர். மெய்டி இனத்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், அதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவிப்பதுமே, மணிப்பூர் வன்முறைக்கு காரணம்.

இம்மாநிலம் வன்முறை களமாக மாறியது முதல், 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான பெண்கள் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வன்முறைகளை, கலவரங்களை அடக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பைரேன் சிங்.

அவரது திறமையற்ற, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளே வன்முறை நீடிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஆயுதங்களை கொள்ளை அடித்ததையும், கொடூரமான செயல்களில் ஈடுபட்டதையும் கட்டுப்படுத்த தவறியதுடன், அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தவறியவர், தற்போது மன்னிப்பு கேட்டதன் வாயிலாக, கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த வகையிலும் ஆறுதலும், அமைதியும் அடைய மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

முதல்வர் பைரேன் சிங்கின் ஆறுதல் வார்த்தைகள், பல மாதங்களாக தொடர்ந்த வன்முறையில் உறவுகளை பறிகொடுத்தவர்களுக்கும், வீடுகள் தீக்கிரையானதை பார்த்து கதறியவர்களுக்கும், குண்டு வீச்சுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கும்பல் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கும், அவர்களின் சொல்ல முடியாத துயரங்களையும், அனுபவிக்கும் வேதனைகளையும் எந்த வகையிலும் துடைக்கப் போவதில்லை என்றே சொல்லலாம்.

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாலும், மக்கள் கவுரவமாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ தேவையான நடவடிக்கைகளை பைரேன் சிங் எடுக்காததால், 50,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, மற்றொரு பகுதியில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எல்லாம், இவரின் ஆறுதல் வார்த்தைகளால், எந்த வகையிலும் சமாதானம் அடைய மாட்டார்கள் என்பதே உண்மை.

அத்துடன், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான, ஒருதலைப்பட்சமான அவரின் குற்றச்சாட்டுகள், அவரது தலைமை மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்து விட்டது. அவரது மன்னிப்பு என்பது, தன் பொறுப்பை ஏற்காமல், பழியை திசை திருப்பும் வெளிப்படையான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. பைரேன் சிங்கின் பதவிக்காலம், அவரது திறமையின்மைக்கு ஒரு முக்கிய அடையாளம் என்பதையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணி காக்க அவர் தவறி விட்டார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இதனால், பைரேன் சிங் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என, சில தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதும் நியாயமானதே. தவறுக்கு பொறுப்பை ஏற்காத அவரின் செயலானது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

மணிப்பூர் மாநிலத்திற்கு, தற்போது நிலவும் வன்முறை சூழ்நிலையை மாற்றி, அமைதியை ஏற்படுத்துவதுடன், பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய, அனைத்து சமூகத்தினரையும் சமத்துவமாக நடத்தக்கூடிய ஒரு திறமையான தலைமையே தேவை.

பைரேன் சிங், தன் தோல்விகளுக்கான விளைவுகளை இனி வரும் நாட்களில் சந்தித்தே ஆக வேண்டும். அவரின் மன்னிப்பு மட்டும் போதாது; வன்முறைகளுக்கும் அவரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

Advertisement