தொடரை வென்றது நியூசிலாந்து: இலங்கை மீண்டும் தோல்வி

ஹாமில்டன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. இலங்கை அணி மீண்டும் ஏமாற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழை காரணமாக தலா 37 ஓவர் போட்டியாக நடந்தது.
நியூசிலாந்து அணிக்கு வில் யங் (16) ஏமாற்றினார். ரச்சின் ரவிந்திரா (79), மார்க் சாப்மேன் (62) அரைசதம் கடந்தனர். டேரில் மிட்செல் (38), பிலிப்ஸ் (22), கேப்டன் சான்ட்னர் (20) ஓரளவு கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன் எடுத்தது. 'சுழலில்' அசத்திய இலங்கையின் மகேஷ் தீக்சனா, 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட் சாய்த்தார்.


சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கமிந்து மெண்டிஸ் (64) நம்பிக்கை தந்தார். பதும் நிசங்கா (1), குசால் மெண்டிஸ் (2), கேப்டன் சரித் அசலன்கா (4) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். இலங்கை அணி 30.2 ஓவரில் 142 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் வில் ரூர்கே 3, ஜேக்கப் டபி 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ரச்சின் ரவிந்திரா வென்றார்.


தீக்சனா 'ஹாட்ரிக்' வீண்


ஆட்டத்தின் 35வது ஓவரின் கடைசி 2 பந்தில் சான்ட்னர், நாதன் ஸ்மித்தை அவுட்டாக்கிய மகேஷ் தீக்சனா, 37வது ஓவரின் முதல் பந்தில் மாட் ஹென்றியை வெளியேற்றினார். ஒருநாள் போட்டியில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த 7வது இலங்கை பவுலரானார் தீக்சனா. ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ், லசித் மலிங்கா, பர்வேஸ் மகரூப், திசாரா பெரேரா, வணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா மதுஷங்கா 'ஹாட்ரிக்' சாதனை படைத்திருந்தனர். இதில் மலிங்கா 3, வாஸ் 2 முறை இச்சாதனை படைத்திருந்தனர்.

Advertisement