காஞ்சிபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 5.2 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்:தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பதிவாகும் நிலத்தடி நீர்மட்டத்தை, நீர்வள ஆதாரத்துறை ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, இணையதளத்தில் பதிவிட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, நிலத்தடிநீரை ஆய்வு செய்தது.

இதில், நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்கள் நிலத்தடிநீர் தொடர்ந்து உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை இம்முறை இயல்பை காட்டிலும் சற்று அதிகம் பெய்த காரணத்தால், ஏரி, குளங்களில் போதிய அளவில் தண்ணீர் உள்ளது.

பாலாறு, செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் 10.5 அடியாக இருந்த நீர்மட்டம், நவம்பரில் 2.0 அடி உயர்ந்து, 8.5 அடியாக பதிவாகி உள்ளது.

அதையடுத்து, டிசம்பரில் 5.2 அடி உயர்ந்து, தற்போது 3.3 அடியாக பதிவு செய்யப்பட்டுஉள்ளது. கடந்த அக்டோபர் மாதம், 10.5 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், வேகமாக உயர்ந்து தற்போது, 3.3 அடியில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

Advertisement