விஜய் சிவா குரலில் ரசிகர்கள் சிலிர்ப்பு

பிரபல கர்நாடக பாடகர் விஜய் சிவா, வயலின் கலைஞர் ஸ்ரீ ராம்குமார், மிருதங்க வித்வான் மனோஜ் சிவா, கஞ்சிரா வித்வான் ராஜகணேஷ் உள்ளிட்டோர் நிகழ்த்திய இசை கச்சேரி, வளசரவாக்கம் ஷக்தி சங்கீத சபாவில் நடந்தது.

'சாமி நின்னே' வர்ணத்தை ஸ்ரீ ராகம், ஆதி தாளத்தில் பாடி, நிகழ்ச்சியை மங்களகரமாக இசைக்குள் விஜயம் செய்தார், பாடகர் விஜய் சிவா.

அடுத்ததாக, தியாகராஜரின் 'சுஜன ஜீவனா' கீர்த்தனையை, கமாஸ் ராகம், ரூபகம் தாளத்தில் பாடியது, கலக்கலாக இருந்தது. ரசிகர்களுக்கு சிருங்காரத்தை சில்லென்று உணரவைத்து, சிலிர்ப்பூட்டினார்.

ரசிகர்களின் சிலிர்ப்பில் பெற்ற கைத்தட்டல்களை சேர்த்துக் கொண்டு, அடுத்த ஸ்வரங்களை பாடத் துவங்கினார். சங்கர்தாஸ் சுவாமிகள் இயற்றிய, 'இந்த பாராமுகம் ஏது' கீர்த்தனையை, பூர்வி கல்யாணி ராகம், ஆதி தாளத்தில், முருகபெருமான் மீது கோர்வையாக பாடிய பாடல், பக்தியின் செறிவை ஊட்டியது.

தொடர்ந்து, முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய,'ஸ்ரீ பார்கவி' கீர்த்தனையை, மங்கள கைசிகி ராகம், மிஸ்ர சாபுவில் பாடும்போது, அழகிய மலரை வண்டுகள் வட்டமடிப்பது போல, அழகிய இசை ரீங்காரத்தை கேட்டு, ரசிகர்கள் அமர்ந்தபடியே வட்டமடித்தனர்.

பின், பட்டணம் சுப்பிரமணிய அய்யரின், 'அபிமானமென்னெடு' கீர்த்தனையை, பேகட ராகம், ஆதி தாளத்தில் விஜய்சிவா பாடியபோது, ரசிகர்கள் வரவேற்று கைத்தட்டினர்.

தனி ஆவர்த்தனத்தில், மிருதங்கத்தில் மனோஜ் சிவாவின் வாசிப்பு திறமைக்கு ஒரு பேஷ் பேஷ்! கஞ்சிரா ராஜகணேஷ் வாசிப்புக்கு ஒரு சபாஷ்!

முக்கிய உருப்படியாக, 'மா பழனி மலை' பாடலை, கரஹரபிரியா ராகம், திஸ்ர ஜாதி ரூபக தாளம், கண்ட நடையில் அமைத்து, பல பரிமாணங்களில் விதவிதமாக பாடி, தன் இசை ஊற்றால் ரசிகர்களின் தாகம் தீர்த்தார்.

தொடர்ந்து, ஷியாமா சாஸ்திரியின் 'மாயம்மா' கீர்த்தனையை, ஆஹிரி ராகத்தில் பாடினார். 'பெருகலாம் தவம்' எனும் அப்பர் தேவாரத்தையும் அழகுறப் பாடினார்.

பின், ரமண மஹரிஷி அருளிய 'அருணாச்சல சிவ' எனும் அக் ஷரமணிமாலையில் சிலவற்றை பாடி, அருணாச்சலேஸ்வரருக்கு மணிமாலையாக்கினார்.

இறுதியாக, 'பக்தியால் யான் உன்னை' எனும் திருப்புகழை பாடி, மங்கலம் பாடி முடித்தார்.
- நமது நிருபர் -

Advertisement