எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் நெல்லை நாடார் பள்ளி வெற்றி

சென்னை, எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றன.

இதில், 'டி - 20' கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், கடந்த மாதம் துவங்கின.

ஆனால், வடகிழக்கு பருவ மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கின.

நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், எம்.சி.சி., பள்ளி மற்றும் நெல்லை நாடார் அணிகள் எதிர்கொண்டன. டாஸ் வென்ற எம்.சி.சி., அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

வெற்றி இலக்குடன் அடுத்து பேட் செய்த, நெல்லை நாடார் அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. இதனால், பந்துகள் அடிக்கடி எல்லை கோட்டை தாண்டின.

இதனால், 8.1 ஓவர்களிலே 2 விக்கெட் மட்டுமே இழந்து, 120 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அணி வீரர்கள் சரண் 45 ரன்களும், கீர்த்திவாசன் 50 ரன்களும் அடித்து வெற்றிக்கு கைக்கொடுத்தனர்.

சிவசாமி பள்ளி தோல்வி



நேற்று காலை நடந்த போட்டியில், சிவசாமி பள்ளி மற்றும் கோலபெருமாள் பள்ளி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய, சிவசாமி அணி 18.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து பேட் செய்த கோல பெருமாள் பள்ளி, 9.3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 99 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

அணியின் வீரர் ராஜிவ் 22 பந்துகளில் ஒரு சிக்சர், ஏழு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ராகுல் 38 ரன்களும் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.

Advertisement